
கோலாலாம்பூர், ஜூலை-7 – தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் இலக்கவியல் இடைவெளி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக வலுவூட்டல் & சமூக வழிகாட்டல் இயக்கம் எனப்படும் ACE எச்சரித்துள்ளது.
நாட்டில் உள்ள 99 விழுக்காட்டுத் தமிழ்ப்பள்ளிகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) ஆய்வின் முடிவுகளை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டது.
இந்த ஆய்வின்படி, 68 விழுக்காட்டு தமிழ்ப்பள்ளிகளில் கல்வியமைச்சின் கணினி ஆய்வகங்கள் இல்லை என்றும், 56 விழுக்காட்டுப் பள்ளிகளில் முறையான ICT வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் ICT வகுப்புகளை நடத்த பெற்றோர், உள்ளூர் சமூகம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் (LPS) பங்கெடுக்கலாம் என கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
இருப்பினும், கல்வியமைச்சின் பாடங்களுக்கான குறைந்தபட்ச கற்பித்தல் நேரத்தைப் பாதிக்காத வகையில், கால அட்டவணையில் கூடுதலாக 60 நிமிடங்கள் சேர்த்து ICT வகுப்புகளை நடத்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளி மேலாளர் வாரியத்திற்கும் மாநிலக் கல்வி இலாகாக்கள் அனுமதி மறுத்து வருவதாக ACE அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதனால் ஏழை மற்றும் புறநகர் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ACE, மாணவர்களிடம் எவ்வித கட்டாயக் கட்டணமும் வசூலிக்காமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு உடனே தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
இலக்கவியல் யுகத்தில் இது ஒரு விருப்பச் செலவு அல்ல; மாறாக மாணவர்களின் கல்விச் சமத்துவத்திற்கான வியூக முதலீடு என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.



