
கோலாலம்பூர், ஜூலை.09-1MDB கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து விவாதிக்க Jho Low எனப் பரவலாக அறியப்படும் தொழிலதிபர் Low Taek Jho, சீனக் குழுவொன்றுடன் மலேசியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. Sarawak Report மற்றும் The Wall Street Jounal ஆகியவற்றில் வெளியான அத்தகவல் குறித்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman கேள்வி எழுப்பினார்.
அத்தகைய பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தால், அதில் நிதி அமைச்சும் நிச்சயம் ஈடுபட்டிருக்கும். ஏனெனில் திருப்பிச் செலுத்தப்படும் எந்தவொரு தொகையும் அமைச்சால் நிர்வகிக்கப்படும் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என Syed Saddiq சுட்டிக் காட்டியிருந்தார். அக்கேள்விக்குப் பதிலளித்த துணை நிதி அமைச்சர் Liew Chin Tong, அக்குற்றச்சாட்டை தாம் மறுப்பதாகத் தெரிவித்தார்.
உலக வரலாற்றில் மிகப் பெரிய நிதி மோசடி வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் 1MDB ஊழல் விவகாரத்தில், 17.69 பில்லியன் ரிங்கிட் முறைகேடாக கையாடப்பட்டதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் Jho Low மீது, மலேசியா மற்றும் அமெரிக்காவில் ஊழல், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என Jho Low தொடர்ந்து மறுத்து வருகிறார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.



