
கோலாலம்பூர், ஜூலை.09- மலேசியா இனி நார்வேயிலிருந்து தற்காப்பு சார்ந்த பொருட்களைக் கொள்முதல் செய்யாது. தற்காப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin அவ்வாறு கூறியிருக்கிறார். மலேசியாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த கடற்படைத் தாக்குதல் ஏவுகணை அமைப்பு முறை ஏற்றுமதிக்கான உரிமத்தை நார்வே ரத்து செய்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
நார்வேயிடமிருந்து எதிர்காலத்தில் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு தற்காப்பு அமைச்சு பரிந்துரை செய்ததை அமைச்சரவையும் ஒப்புக் கொண்டுள்ளது. அதே வேளை அக்கட்டுப்பாட்டை பிற அமைச்சுகளுக்கு நீட்டிப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருவதாகவும் Khalid Nordin தெரிவித்தார்.
நார்வேயுடன் தொடர்புடைய நடப்பிலுள்ள ஒப்பந்தங்கள் காலாவதியானவுடன், அரசாங்கம் அவற்றை புதுப்பிக்கவோ அல்லது மீண்டும் அவர்களின் சேவைகளை நாடவோ செய்யாது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, பணம் செலுத்தப்பட்ட பின்னரும் ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்ததன் மூலம் நார்வே மலேசியாவிற்கு மரியாதை அளிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடற்படைத் தாக்குதல் ஏவுகணை அமைப்பு முறை, நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே என நார்வே விளக்கமளித்துள்ளது. அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 2018-ல் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்த நிலையில், முன் அறிவிப்பு இன்றி இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது என Khalid தெளிவுபடுத்தினார்.



