உலகக் கிண்ணக் கால்பந்து: சுவிட்சர்லாந்தை 3-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜேண்டினா; காத்திருப்பதோ இங்கிலாந்து

கன்சாஸ், ஜூலை-12 – 2026 உலகக் கிண்ணக் கால்பந்து காலிறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜேண்டினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு வெற்றியாளரான அர்ஜேண்டினா தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தைச் செலுத்தி 1-0 என முன்னணி வகித்தது; என்ற போதிலும் 67-ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து 1-1 என சமப்படுத்தியது.
இதனால் புதுத் தெம்பைப் பெற்ற சுவிட்சர்லாந்து வெற்றிக் கோலுக்குப் போராட முனைந்த போது, துரதிஷ்டவசமாக அதன் ஓர் ஆட்டக்காரர் 2 மஞ்சள் அட்டைகளைப் பெற்றதால் திடலிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எஞ்சிய சுமார் அரை மணி நேரங்களுக்கு வெறும் 10 பேருடனேயே விளையாட நேர்ந்தாலும், அர்ஜேண்டினா மேலும் கோல் போடுவதைத் தடுத்து நிறுத்தி, கூடுதல் நேரம் வரை சுவிட்சர்லாந்து ஆட்டத்தைக் கொண்டுச் சென்றது.
எனினும், 112, 120 ஆகிய நிமிடங்களில் 2 கோல்களை அடித்து, 3-1 என கோல் கணக்கில் அர்ஜேண்டினா வெற்றிப் பெற்றது.
உலகக் கிண்ணத்தைத் தற்காக்கும் முயற்சியில் அர்ஜேண்டினா அடுத்து அதன் பரம வைரியான இங்கிலாந்தைச் சந்திக்கிறது.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், ஸ்பெயினுடன் மோதுவதால், கால்பந்து இரசிகர்களுக்கு பெரும் விருந்தே காத்திருக்கிறது எனலாம்.



