
திரெங்கானு, ஜூலை 13 – திரெங்கானுவிலுள்ள பெங்காலான் காவி (Pengkalan Gawi) R&R மற்றும் அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் அருகே கருஞ்சிறுத்தை மீண்டும் தென்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு இதே பகுதியில் அது முதன்முறையாக காணப்பட்ட நிலையில், மீண்டும் தென்பட்டதால் சாலைப் பயணிகள் மற்றும் அப்பகுதி தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் கருஞ்சிறுத்தை அடிக்கடி நடமாடுவது மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அந்த இடம் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால், அது கருஞ்சிறுத்தையின் இயல்பான வாழ்விடமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா பாதுகாப்புத் துறையான Perhilitan, சனிக்கிழமை இரவு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜூலை 7 முதல் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், கருஞ்சிறுத்தையைப் பாதுகாப்பாகப் பிடிக்க கூண்டும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



