
கோலாலம்பூர், ஜூலை 13 – சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah), இன்று ஷா ஆலம் LRT3 ரயிலில், பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோகான் செத்தியா வரை பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடாவும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட LRT3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரசரானா மலேசியா நிறுவனத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த புதிய ரயில் சேவை, ஷா ஆலம், கிள்ளான் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு வேகமான, வசதியான பொதுப் போக்குவரத்தை வழங்குவதோடு, போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.
மேலும், இந்தத் திட்டத்தை 10 ஆண்டுகள் 9 மாதங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்ய உழைத்த 13,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலாளர்கள் மற்றும் பிற பணியாளர்களின் அர்ப்பணிப்பை சுல்தான் பாராட்டினார்.
அதேவேளையில், பின்னர் திறக்கப்படவுள்ள மேலும் ஐந்து LRT3 நிலையங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், பொதுமக்கள் இந்த ரயில் சேவையை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



