
கோலாலம்பூர், ஜூலை-20-ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கிண்ண இறுதியாட்டத்தைக் காண டத்தாரான் மெர்டேகாவில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் அவ்விடத்தைக் குப்பை காடாக மாற்றிய சம்பவம் குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றம் DBKL அதிருப்தி தெரிவித்துள்ளது.
அவ்வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்துடன் ஒன்று கூடி கால்பந்து விளையாட்டைக் கண்டு களித்தனர். ஆட்டம் முடிவடைந்த பிறகு அவ்விடத்தில் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து காணப்பட்டதாக DBKL விளக்கியது.
குப்பைகளை எங்களது ஊழியர்கள் அகற்றுவார்கள்தான். எனினும் குப்பைகளை மற்றவர்கள் சுத்தம் செய்வார்கள் என எதிர்பார்க்கக்கூடாது.
டத்தாரான் மெர்டேகா என்பது நாட்டின் பெருமை மற்றும் வரலாற்றின் சின்னம் என DBKL நினைவூட்டியது. கோலாலம்பூர் நமது இல்லம். நமது சொந்த இல்லத்தைப் போலவே நாம் அதனைப் பேணிக் காக்க வேண்டும் என அது மேலும் குறிப்பிட்டது.
இவ்வேளையில், அச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில், இணையவாசிகள் பலர் அப்பொறுப்பற்றச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களின் மனப்பான்மை மாற வேண்டும், குப்பை கூளங்கள் நிறைந்து கிடப்பதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது என அவர்கள் கருத்துரைத்துள்ளனர்.



