Latestமலேசியா

பிரதமரின் உத்தரவு; உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ரமணன்

செனாவாங், ஜூலை-29– பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவுக்கு இணங்க, உணவகங்கள் மற்றும் உணவுச் சேவைத் துறையில் நீடித்து வரும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.

நேற்று செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினையை 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்குமாறு பிரதமர் மனிதவள அமைச்சுக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்ததாக தெரிவித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில், மனிதவள அமைச்சு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், நேற்று கூட வங்காளதேச அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“உணவகத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதற்காக வங்காளதேச அரசாங்கத்துடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

பிரதமர் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தாலும், அதற்கு முன்பாகவே அமைச்சின் பொறுப்புகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவுச் சேவைத் துறையினர் நீண்டகாலமாக எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே அரசின் இலக்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.

உணவகத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், தொழிலாளர் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, நாட்டின் உணவக மற்றும் உணவுச் சேவைத் துறையின் செயல்பாடுகள் மேலும் சீரடையும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!