
அம்பாங், செப்டம்பர்-22,சிலாங்கூர், அம்பாங்கில் தொலைத்தொடர்பு கேபிள்களைத் திருடிச் சென்ற லாரிக்கு ரோந்து போலீஸின் MPV கார் பாதுகாப்பு வழங்கி அழைத்துச் சென்றதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை புக்கிட் அமான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவு, சம்பந்தப்பட்ட ரோந்துப் பிரிவு போலீஸார் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் சந்தேகத்திற்கிடமான அந்த லாரியை இடைமறித்துச் சோதனையிட்டதாக விளக்கியது.
அந்த உடனடி சோதனையின் போது, முறையான ஆவணங்களின்றி வெட்டப்பட்ட கேபிள்களை ஏற்றிச் செல்ல முயன்ற ஆடவரைப் போலீஸார் அந்த இடத்திலேயே கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
எனவே, திருடர்களுக்குப் போலீஸார் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை;
இதுபோல போலீஸாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கைதுச் செய்யப்பட்ட சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் திருட்டு வழக்கு பதிவுச் செய்யப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.



