
கோலாலம்பூர், ஜூலை.31-இந்தோனேசியாவின் Soekarno-Hatta விமான நிலையத்தில் 25 கிலோ எடையுள்ள 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டஸி மாத்திரைகளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசிய விமானி கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் அச்சந்தேக நபர் கைதானார். அவரிடமிருந்து போதைப்பொருட்களையும் இந்தோனேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட அந்த விமானி அனைத்துலக விமான நிறுவனமொன்றில் பணி புரிவதாக நம்பப்படுகிறது. சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டறிந்ததை அடுத்து இந்தோனேசிய காவல் துறையினர் அவரது பயணப் பெட்டியைத் திறக்கக் கூறியுள்ளனர். அப்போது 14 பெரிய பொட்டலங்களையும், methamphetamine அடங்கிய ஒரு பொட்டலத்தையும் அவர்கள் கண்டெடுத்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
போதைப்பொருட்களைத் தவிர, அவரது முதுகுப்பை, மலேசியக் கடப்பிதழ், மலேசிய அடையாள அட்டை, மலேசிய ஓட்டுநர் உரிமம், ஐபோன் மற்றும் அவரது சீருடை உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
50,000 ரிங்கிட்டுக்கு ஈடான போதைப்பொருட்களை Jakartaவிற்குக் கொண்டு செல்லுமாறு தமக்குப் பணிக்கப்பட்டதாக அந்த விமானி ஒப்புக் கொண்டுள்ளார். Jakarta சென்றதும் மலேசியாவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் ஒருவரும், மற்றொரு நபரும் பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள் எனத் தம்மிடம் கூறப்பட்டதாகவும் அவர் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்தார்.
சிறுநீர் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது. விசாரணைகளுக்கு உதவ அவர் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அச்சந்தேக நபர் ஏற்கனவே இரு முறை போதைப்பொருட்களைக் கடத்திய விவரமும் தெரிய வந்துள்ளது.



