
கிள்ளான், ஆகஸ்ட்-2 – கிள்ளானில் Rocky என்ற செல்லப் பிராணி நாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் கால்நடைச் சேவைத் துறை ஒரு சந்தேக நபர் மற்றும் சில சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது.
விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் விலங்கு துன்புறுத்தல் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20,000 முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கடந்த புதன்கிழமை இரவு மாநகர மன்ற அமுலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
நாயின் உரிமையாளரால் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாகக் கயிற்றைத் தளர்த்த முடியாமல் நாய் உயிரிழந்ததாக, MBDK எனும் கிள்ளான் அரச மாநகர மன்றம் தெரிவித்துள்ளது.
எனினும், அமுலாக்க அதிகாரிகளின் ‘கொடூரமே’ நாயின் மரணத்திற்குக் காரணம் எனக் கூறி வலைத்தளவாசிகளும் பொது மக்களும் கொந்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நியாயமான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனச் சிலாங்கூர் கால்நடை சேவைத் துறை உறுதியளித்துள்ளது.



