
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கோலாலம்பூர், பங்சார் ஜாலான் ரியோங் பகுதியிலுள்ள பிரபல உணவகத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் மின்சாரப் பெட்டி தீப்பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மின்சாரப் பெட்டியில் மட்டும் தீப்பற்றியதாகவும், பொதுமக்களால் அத்தீ அணைக்கப்பட்டதாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும் தொழில்நுட்பப் பணியாளர்களும் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தீக்காயங்கள் எதுவும் வெளிப்படையாகக் காணப்படவில்லை. எனினும், உணவகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.
மின்சாரம் இல்லாததால் பணப் பரிவர்த்தனை இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் வரை உணவகத்தின் விற்பனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.



