
மலாக்கா, ஆகஸ்ட் 3 – மலாக்கா, ஆயர் கெரோ நீதிமன்றத்தில், 9 வயது மகளை உடல் ரீதியாக துன்புறுத்தி காயங்களும் மன உளைச்சலும் ஏற்படுத்திய 36 வயது லாரி ஓட்டுநரும், அவரது 35 வயது மனைவியும் குற்றஞ்சாட்டப்பட்டனர். எனினும், இருவரும் அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் கணவருக்கு 10,000 ரிங்கிட் மற்றும் மனைவிக்கு 9,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கியதுடன், சாட்சிகளைத் தொடர்புகொள்ளக் கூடாது மற்றும் மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
இந்த வழக்கு செப்டம்பர் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



