
கோலா திரங்கானு, ஆகஸ்ட்.04-திரங்கானுவில், Kampung Gong Tok Naderக்கில் வீடொன்றில் ஏற்பட்ட தீயில் தமது மாற்றுத் திறனாளி மகனைக் காப்பாற்றும் தாய் ஒருவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அத்துயரச் சம்பவத்தில் அவரது அம்மகன் தீயில் பலியானார்.
நேற்றிரவு 10.50 மணிக்கு தீ பரவிய போது 59 வயதான அப்பெண்மணியும் கணவரும் வீட்டின் கீழ் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், 41 வயதான அவரது அம்மூத்த மகன் மேல் தளத்தில் உள்ள படுக்கையறையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து எச்சரித்து, அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு பொதுமக்கள் கூச்சலிட்ட பின்னரே அம்மாது நிலைமையை உணர்ந்துள்ளார். படுக்கையறை கதவைத் திறந்த போது, மேல் தளத்திலும் கீழ் தளத்தின் பல பகுதிகளிலும் தீ கொழுந்து விட்டு எரிவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரது கணவரைக் காப்பாற்றினர். வீட்டிற்கு வெளியே வந்த பிறகுதான் தமது மகன் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்து எழுப்புவதற்காக உடனடியாக மீண்டும் வீட்டினுள் சென்றுள்ளார்.
உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த மகனின் படுக்கையறை கதவைத் தட்டியபடி, மூன்று முறை தீயை எதிர்கொண்டு உள்ளே செல்ல முயன்றும் தம்மால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை என அவர் சோகத்துடன் கூறினார். நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவரான மரணமடைந்த நபர், கற்றல் குறைபாடு கொண்டவர். அவர் நீண்ட காலமாக வீட்டை விட்டு வெளியே செல்லாதவர்.
கடந்த சில நாட்களாகவே தம் மகன் சரியாகச் சாப்பிடாமல், அமைதியாக இருந்ததாகவும், பெரும்பாலான நேரத்தை தன் அறையிலேயே கழித்ததாகவும் அம்மாது குறிப்பிட்டார். அத்தீயில் அவரது வீட்டில் இருந்த அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இவ்வேளையில் தகவல் கிடைத்து சம்பவ இடத்தைச் சென்றடைந்த உயிரிழந்த ஆடவரின் தங்கை, தமது அண்ணனின் மரணத்தைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.



