Latestஉலகம்

75,000 மரபணுக் குறியீடுகள் ஆய்வு: பழந்தமிழர்களின் மரபணு வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த அறிவியலாளர்கள்

சென்னை, ஆகஸ்ட்-9 – கீழடி அகழாய்வு மீண்டும் ஒருமுறை தமிழினத்தின் பழைமையையும் பெருமையையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கீழடி, கொந்தகை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய தொல்லியல் களங்களில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து சுமார் 75,000 மரபணுக் குறியீடுகளை ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆரம்பகட்ட DNA ஆய்வுகளின்படி, பண்டைக்கால மக்கள் நவீன தென்னிந்தியர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் பிற தெற்காசிய மக்களுடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் பயன்படுத்தப்படும் அதிநவீன மரபணு வரிசைமுறை முறைகளைப் பயன்படுத்தி, கடுமையாகச் சிதைந்த பழங்கால மாதிரிகளிலிருந்து DNA-வைப் பிரித்தெடுத்து அவர்களின் பரம்பரைத் தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மரபணுவைத் தாண்டி, புரத மற்றும் இரசாயன சோதனைகள் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய அவர்களின் செழுமையான உணவு முறையும் வெளிப்பட்டுள்ளது.

சமையல் பானைகளில் கண்டெடுக்கப்பட்ட நெய், பால், கீரை மற்றும் சிறுதானியங்களின் எச்சங்கள், சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள செய்திகளுடன் மிகத் துல்லியமாகப் பொருந்துகின்றன.

இதன் விரிவான ஆய்வு முடிவுகள் மற்றும் 9 ஆய்வுக் கட்டுரைகள் இவ்வாண்டு பிற்பகுதியில் அனைத்துலக அளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றுகளோடு நிரூபிக்கப்படும் இந்த உண்மைகள், “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி” தமிழ்க்குடி என்பதற்கான ஆணித்தரமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!