
கிள்ளான், ஆகஸ்ட்-15,கிள்ளான், தாமான் பாயு பெர்டானாவில் உள்ள கடைவீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாகச் செயல்பட்ட ஆடவர் ஒருவர், இரு சிறுவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளார்.
உதவி கோரி எழுந்த அலறல் சத்தத்தைக் கேட்டு, Rahmat Burhan என்ற அந்த ஆடவர், எந்தவொரு பாதுகாப்புக் கருவியும் இன்றி 3 மாடிக் கட்டடத்தின் மேல் தளத்திற்கு சுவரில் ஏறியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொது மக்களின் உதவியோடு ஜன்னல் கம்பிகளை உடைத்த அவர், அடர்ந்த புகைக்குள் சிக்கியிருந்த இரு சிறுமிகளையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்தார்.
வெளியே வந்த கையோடு, சிறுமிகளில் ஒருவர் Rahmat-டைக் கட்டி அணைத்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட அவ்விரு சிறுவர்களும் உடனடியாக சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
இவ்வேளையில், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தகவல்படி, கட்டடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், தனித்தனி கழிப்பறைகளில் இருந்து முதியவர் ஒருவரும் ஒரு சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



