
ஈப்போ, ஆகஸ்ட்-15,
ஈப்போவில் 17 வயது பள்ளி மாணவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை மோதிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த போலீஸ் அதிகாரி நஸ்ரி அப்துல் ரசாக் (Nazri Abdul Razak), அசாத்திய வேகத்துடனும் பொறுப்பற்ற முறையிலும் செயல்பட்டதாக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர்
Afzainizam Abdul Aziz தனது இறுதி வாதத்தில், மாணவர் Zaharif Affendi Zamrie-யை அதிவேகத்தில் மிக நெருக்கமாக துரத்திச் சென்றதன் மூலம் மரணம் ஏற்படும் என்பதை அந்த அதிகாரி நன்கு அறிந்திருந்தார் என்றார்.
பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ள வேகத்தடையைத் தாண்டிய பிறகும் அவர் தனது வாகனத்தின் வேகத்தைக் குறைக்காமல், சாலைச் சந்திப்பில் அந்த மாணவரைப் பின்புறமாக மோதியதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
46 வயது நஸ்ரி, 2023 டிசம்பர் 15-ஆம் தேதி காலை 11.55 மணி முதல் மதியம் 12.32 மணிக்குள், SMK Jati பள்ளிக்கு அருகே அந்த இளைஞரைக் கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்காப்பு வாதத்தை முன்வைக்க அவர் அழைக்கப்படுவாரா என்பது குறித்த தீர்ப்பை நீதிபதி பூபிந்தர் சிங் (Bhupindar Singh) வரும் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
ஒருவேளை நஸ்ரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.



