
பிரசல்ஸ், ஆகஸ்ட்-18-பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர், சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கப் புதையலைக் கண்டெடுத்துள்ளார்.
தலைநகர் பிரசல்ஸ் அருகே இயங்கி வந்த பழைய மதுபான ஆலை ஒன்றின் கீழ்த்தளத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Kobe என்ற அந்த பகுதிநேரப் பணியாளர் கழிவுநீர்க் குழாய் அமைக்கும் பணிக்காகச் சுவரைத் தோண்டியபோது, தங்கக் கட்டிகள், தங்கத் துண்டுகள் மற்றும் பழங்கால நாணயங்கள் அடங்கிய புதையல் தட்டுப்பட்டது.
அதில் உள்ள பெரும்பாலான தங்கக் கட்டிகளில் 1957 மற்றும் 1961-ஆம் ஆண்டுகளின் முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்த கட்டடத்தின் உரிமையாளரான தொண்டு நிறுவனத்திற்கும் போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தங்கம் பெல்ஜிய அரசாங்கத்தின் பாதுகாப்புக் கருவூலத்திற்கு மாற்றப்பட்டது.
பல தசாப்தங்களாக சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த தங்கத்தின் பின்னணி குறித்து அந்நாட்டு போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.



