
துபாய், ஆகஸ்ட்-19-ஐக்கிய அரபு சிற்றரசின் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது இளைஞர் லக்ஷ்மணன் மெய்யப்பன், உலகின் மிக இளம் வயது பட்டயக் கணக்காய்வாளர் அதாவது Chartered Accountant என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
16 வயது 141 நாட்களில் இந்த வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று பொதுமுடக்கக் காலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை முடித்த பின்னர், பட்டயக் கணக்காய்வாளரான தனது தாயாரின் வழிகாட்டலில் இவர் கணக்கியல் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
15-வது வயதில் ACCA தகுதிப் படிப்பைத் தொடங்கிய லக்ஷ்மணன், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வெறும் ஓராண்டுக்குள் அனைத்துத் தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்தார்.
அதனைத் தொடர்ந்து CFA பட்டயத்தையும் வென்ற அவர், தற்போது நிதித்துறையில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.
தற்போது துபாயில் உள்ள முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், சாதனைகளுக்காக இல்லாமால் ஆர்வத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.



