Latestமலேசியா

செங்காங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமானத்திற்கு RM248,560 நிதி

கூலாய், ஆகஸ்ட் 19 — ஜோகூர், செங்காங்கில் கட்டப்பட்டு வரும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு RM248,560 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த வசதிகளுடன் புதிய ஆலயம் அமைய வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவுக்கு இந்த நிதி மேலும் வலுசேர்த்துள்ளது.

வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் இந்து அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான RIBI திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்புத் துணையமைச்சருமான தியோ நீ சிங் தெரிவித்தார்.

ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட இவர், RM248,560 நிதி கட்டுமானச் செலவின் சுமையைக் குறைப்பதுடன், பணிகள் மேலும் சுமுகமாகவும் விரைவாகவும் நடைபெற உதவும் என கூறினார்.

இதனிடையே, கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் 2023 முதல் இவ்வாண்டு வரை ஆலயத்தின் தேவைகள் மற்றும் தொடர்புடைய பணிகளுக்காக மொத்தம் RM18,000 வழங்கியுள்ளதாகவும் தியோ தெரிவித்தார்.

“ஆலயம் என்பது வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது சமூகத்தின் அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியலின் ஒரு பகுதி,” என குறிப்பிட்ட இவர், புதிய ஆலயம் முழுமையாக நிறைவடைந்து செங்காங் மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றார்.

மேலும், அவரது வருகையின்போது செங்காங் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20 குடும்ப பிரதிநிதிகளுக்கு உணவுப் பொருள் கூடைகளும் வழங்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!