Latestஉலகம்

துருக்கியில் 16,500 ஆண்டுகள் பழமையான 25 ஆமை உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

பிலேசிக், ஆகஸ்ட்-21-துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சித் தளமொன்றில், சுமார் 16,500 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படும் 25 சிறிய ஆமை உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Bilecikக்கில் Inhisar எனுமிடத்தில் Gedikkaya குன்று மற்றும் In குகை ஆகிய பகுதிகளில் துருக்கியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சின் சார்பில், பல்கலைக்கழகமொன்றின் தொல்லியல் துறை குழுவினர் கடந்த மே மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிப் பணியின் போது அவை கண்டெடுக்கப்பட்டதாக Anadolu செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அச்சிறிய ஆமைகள் சுண்ணாம்புக் கற்களால் உருவாக்கப்பட்டுட்டுள்ளன. அதன் சில பகுதிகள் களிமண்ணால் பூசப்பட்டுள்ளன. மிகப் பெரிய ஆமை உருவம் ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் நீளமும் 20 சென்டிமீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

பெரும்பாலான ஆமை உருவங்கள் கரடுமுரடான வடிவிலேயே உள்ளன. அவை நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அலங்காரப் பொருட்களாக இல்லை. சடங்கு நோக்கங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை போல் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொல்பொருள் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட காலக் கணிப்பின் வழி அவை கி.மு. 14,500 முதல் 11,200 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் Gedikkaya மலையே ஆமையைப் போல இருப்பதாக நம்பியிருக்கலாம். அந்நம்பிக்கையே மலை வழிபாட்டு முறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆய்வு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ஆமை உருவங்கள் Bilecik அருங்காட்சியகம் மற்றும் பல்கலைக்கழகமொன்றுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!