
புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்-23 – வணிகக் கடன், உரிமங்கள் அல்லது அரசாங்க உதவித் திட்டங்கள் தேவைப்படும் தொழில்முனைவோர், மக்கள் பிரதிநிதிகளை அணுகுவதற்குப் பதிலாக தங்களுக்கு அருகிலுள்ள ‘நாடி’ (Nadi) மையங்களை நாடலாம் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 222 நாடி மையங்களில், சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான PRIME எனும் புதிய ஒருங்கிணைந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைவதைத் தவிர்த்து, நிதி உதவி, தொழில் உரிமம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பயிற்சிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் பெற அங்கு சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறினார்.
தேசிய தொழில்முனைவோர் கழகம் INSKEN மற்றும் மலேசியத் தொடர்பு- பல்லூடக ஆணையம் MCMC ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் 30,000 முதல் 50,000 வரையிலான தொழில்முனைவோர் இந்த PRIME சேவையின் மூலம் பயனடைவார்கள் என அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.



