Latestமலேசியா

பினாங்கில் பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து கான்கிரீட் பகுதி சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்

ஜார்ஜ்டவுன், செப்-02-பினாங்கு, ஜார்ஜ்டவுனில் Lebuh Chinaவில் உள்ள பாரம்பரியக் கட்டிடமொன்றிலிருந்து கான்கிரீட் பகுதி உடைந்து விழுந்ததில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயமடைந்தார். நேற்றிரவு Hungry Ghost விழாவிற்காக மக்கள் திரளாகக் கூடியிருந்த நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

கட்டிடத்தின் சுவரில் இணைக்கப்பட்டிருந்த கேபிள் ஒன்று கழன்றதை அடுத்து, கட்டிடத்தின் ஒரு மூலையில் இருந்த கட்டமைப்பின் ஒரு பகுதி உடைந்து அப்பெண்ணின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. காயமுற்ற அப்பெண் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பினாங்கு மாநகர் மன்ற ஊழியர்கள் அப்பகுதியிலிருந்த சிதைவுகளை அகற்றி, அங்கு பாதுகாப்பு நாடாவைப் பொருத்தினர்.

இவ்வேளையில், அச்சம்பவம் நிகழ்ந்த போது தாம் தமது கடையில் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்ததாக அருகில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத வணிகர் ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் விழா ஊர்வலத்தில் பங்கேற்கவும் அதைக் காணவும் பொதுமக்கள் கூடியிருந்தனர். கடைக்கு வெளியே பலத்த சத்தம் கேட்கும் வரை என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கட்டிடத்திலிருந்து கான்கிரீட் பகுதி அப்பெண் மீது விழுந்திருந்தது பின்னர்தான் தெரிய வந்தது. சிறிது நேரத்திற்குப் பின், அவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதாக அவ்வணிகர் விவரித்தார்.

கடந்த மாதம்தான் Lebuh Armenian பகுதியில் உள்ள ஒரு பாரம்பரியக் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்த உத்திரத்திலிருந்து கற்களும் மரக்கட்டைகளும் விழுந்து இரு இலங்கைச் சுற்றுப் பயணிகள் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கரையான் அரித்து உத்திரம் பலவீனமடைந்திருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!