
ஜோகூர் பாரு, செப்.02 – கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தனது சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்த ISKCON Senai குழுவினர், தற்போது ஜோகூர், தாமான் செனாய் உத்தாமாவில் அமைந்துள்ள ISKCON செனாயில், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அவதார தினமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
அவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார மகிமையைப் பாடி, கேட்டு, பக்தியுடன் வழிபட்டு பக்தர்கள் இன்புற பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ISKCON செனாயின் ஆராதிய தெய்வங்களான ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவருக்கு மாலை 7 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
மேலும், விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சுவையான பகவத் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். பக்தர்களின் சேவையையும், பிரசாத விநியோகத்தையும் மையமாகக் கொண்டு இஸ்கான் செனாய் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் புனித கும்பத் தீர்த்தங்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு, ஜென்மாஷ்டமி தினத்தன்று ISKCON செனாய்க்கு கொண்டு வரப்படவுள்ளன. கும்பாபிஷேக புண்ணிய தீர்த்தத்தைப் பெற முடியாமல் போன பக்தர்கள், அன்றைய தினம் இஸ்கான் செனாய்க்கு வந்து புனித தீர்த்தத்தைப் பெற்று இறையருளையும் ஆசீர்வாதத்தையும் பெறலாம்.
மேலும், எஸ்பிஎம் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்காக சிறப்பு வழிபாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குழந்தைகளின் அழகிய நடனங்கள், நாடகங்கள், வண்ணம் தீட்டும் போட்டி மற்றும் மாறுவேடப் போட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.
எனவே, ISKCON செனாயில் நடைபெறும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஜோகூர் மாநிலத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் வசிக்கும் பக்தர்கள் தங்களது குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
பக்தி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினத்தை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.



