Latestமலேசியா

14 மணி நேரம் இடைவிடாமல் புத்தகம் வாசித்து சாதனை; 10 வயதிலேயே இரண்டாவது Malaysia Book of Records அங்கீகாரம் பெற்ற ஆயுஷி!

ஷா ஆலாம், செப்டம்பர் 2 — புத்தக வாசிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை சாதனையாக மாற்றியுள்ளார் ஷா ஆலாமைச் சேர்ந்த 10 வயது மாணவி ஆயுஷி யோகேஸ்வரன். தொடர்ந்து 14 மணி நேரம் புத்தகத்தைச் சத்தமாக வாசித்து, “Longest Non-Stop Book Reading Aloud by a Child” என்ற பிரிவில் Malaysia Book of Records அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த 14 மணி நேர வாசிப்பு சாதனையை ஆயுஷி நிறைவு செய்தார். அதற்கான அங்கீகாரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய தினத்தன்று, ஷா ஆலாமில் Perbadanan Perpustakaan Awam Selangor (PPAS) ஏற்பாடு செய்த Selangor Children’s Literature Festival-இல் அவருக்கு வழங்கப்பட்டது.

அதே நிகழ்ச்சியில், ஆயுஷி எழுதிய புதிய சிறுவர் நூலான The Great Good Wolf-உம் வெளியிடப்பட்டது. தனது 8 வயதில் அவர் எழுதிய இக்கதை, Wendy என்ற ஓநாய் கதாபாத்திரத்தின் மூலம் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடக்கூடாது என்பதுடன், கருணை மற்றும் துணிவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

சிறு வயதிலிருந்தே வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்ட ஆயுஷி, தனது 5 வயதிற்குள் 1,600க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்துள்ளார். 6 வயதில் கதைகள் எழுதத் தொடங்கிய அவர், 7 வயதில் தனது முதல் நூலான Unicorn and Little Amanda-வை வெளியிட்டார்.

இது ஆயுஷிக்கு கிடைத்த இரண்டாவது Malaysia Book of Records அங்கீகாரமாகும். இதற்கு முன்பு “Youngest Book Author” என்ற சாதனைக்காகவும் அவர் Malaysia Book of Records-இல் இடம்பிடித்திருந்தார்.

வாசிப்பில் தொடங்கிய ஆர்வத்தை எழுத்தாகவும், தற்போது சாதனையாகவும் மாற்றியுள்ள 10 வயது ஆயுஷியின் பயணம், மற்ற சிறார்களிடையேயும் வாசிப்பு மற்றும் எழுத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!