
புத்ராஜெயா, செப்- 2-தாபோங் ஹாஜி தொடர்பில் RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்டு வரும் விசாரணைக்கு உதவும் வகையில், முன்னாள் அமைச்சர் Datuk Seri Jamil Khir Baharom ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
MACC விண்ணப்பத்தைத் தொடர்ந்து, புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்தது. சவுதி அரேபியாவில் ஹோட்டல்களை குத்தகைக்கு எடுத்தது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க MACC தலைமையகத்திற்கு சென்றிருந்த Jamil Khir, நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
அவ்விவகாரம் MACC சட்டம் 2009-ன் பிரிவு 16(a)(A)-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஆதாயத் தொகையின் குறைந்தது ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதற்கு முன் தாபோங் ஹாஜி முன்னாள் தலைவர் Datuk Seri Abdul Azeez Abdul Rahimமும் முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Irwan Serigarரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதும் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
2014 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான தாபோங் ஹாஜியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த RCI அறிக்கை, கடந்த ஜூலை 29ஆம் தேதி பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. அதில் நிர்வாகம், நிதி மேலாண்மை மற்றும் முதலீடுகளில் கடுமையான குறைபாடுகள் இருந்தது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



