
கோலாலம்பூர், செப்டம்பர்- 9–மலேசியாவைப் பிரதிநிதித்து 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் அழகியைத் தேர்ந்தெடுக்கும் மிஸ் யுனிவர்ஸ் மலேசியா 2026 (MUM 2026) போட்டி, புதிய பரிமாணத்துடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ‘Ratu Prestigious Event Management (RPEM)’ தலைமையில் நடைபெறும் இப்போட்டியின் மூலம் திறமை, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை அனுபவம் கொண்ட மலேசிய அழகியைத் தேர்வு செய்வதே முக்கிய நோக்கமாகும். வரும் நவம்பர் மாதம் Puerto Ricoவில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பு வெற்றியாளருக்கு கிடைக்கும்.
இவ்வாண்டு போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, 21 முதல் 50 வயது வரையிலான மலேசியப் பெண்கள்பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமணமாகாதவர்கள், திருமணமானவர்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் என அனைத்து தரப்புப் பெண்களும் போட்டியில் பங்கேற்கும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. உண்மையான அழகு என்பது வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாமல், முதிர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை அனுபவத்திலும் வெளிப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் அம்மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போட்டியின் தலைவர் மற்றும் தேசிய இயக்குநர் Ayu Omar தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெற்ற நேரடி மற்றும் இணையவழித் தேர்வுகளின் மூலம் பங்கேற்றவர்களில் இருந்து 15 இறுதிப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டனர். மீதமுள்ள இரு போட்டியாளர்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
‘Legacy Reimagined’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்போட்டியில் போட்டியாளர்களுக்கான வழிகாட்டல் அறிமுக நாள் நேற்று நடைபெற்றது. அழகிப் போட்டி வாரம் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதற்கட்டப் போட்டி Holiday Inn Bangsar-ரிலும், அக்டோபர் 2 ஆம் தேதி இறுதிப் போட்டி HGH Convention Centre-ரிலும் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் தேர்வாகும் வெற்றியாளர், வரும் நவம்பர் மாதம் Puerto Ricoவில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் 2026 போட்டியில் மலேசியாவின் பிரதிநிதியாகக் களமிறங்கவுள்ளார்.
இப்போட்டிக்கு Shine Group Services Sdn. Bhd. முதன்மை ஆதரவாளராகவும், Holiday Inn Bangsar அதிகாரப்பூர்வ இடமாகவும் இணைந்துள்ள நிலையில், EnrichMoney, KL Hop-On Hop-Off, Mesa 51, Adam n Eve, Sexy Catch மற்றும் Iven Singh ஆகியோர் மூலோபாயக் கூட்டாளர்களாக ஆதரவு வழங்குகின்றனர்.



