
மதுரை, செப்- 11 – புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90ஆவது வயதில் இன்று காலமானார். வயது மூப்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ்ப் பேராசிரியராக தனது பணியைத் தொடங்கிய சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும் பணியாற்றினார். தமிழின் இலக்கியச் செழுமையையும் சமூகக் கருத்துகளையும் எளிய நடையிலும் நகைச்சுவையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்கு தனித்துவமான இடம் உண்டு.
குறிப்பாக தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பிரபலமான அவர், பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை வழிநடத்தியுள்ளார். பண்டிகைக் கால சிறப்பு பட்டிமன்றங்களில் அவரது நகைச்சுவை கலந்த தீர்ப்பும், எளிமையான பேச்சு பாணியும் பல தலைமுறைகளின் மனதில் நீங்காத இடம்பிடித்தது.
தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்றத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, தமிழக அரசின் கலைமாமணி விருது 2000ஆம் ஆண்டிலும், இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது 2021ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டன.
மேலும், தமிழ் திரைப்படங்களிலும் தனது முத்திரையைப் பதித்த சாலமன் பாப்பையா, பாய்ஸ் மற்றும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழை பாமர மக்களுக்கும் ரசிக்கும்படி கொண்டு சென்ற தனித்துவக் குரலாக விளங்கிய சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலாசார உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.



