Latestமலேசியா

விமானிகள், விமானப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் திடீர் போதைப்பொருள் பரிசோதனை – AADK

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 11 — விமானத் துறையில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு மாதத்திற்கு குறைந்தது ஒருமுறை திடீர் சிறுநீர் பரிசோதனை நடத்த வேண்டுமென தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK முன்மொழிந்துள்ளது.

AADK தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ (Ruslin Jusoh), இதுகுறித்து மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும், அடுத்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என்றும் தெரிவித்தார்.

தற்போது சுமார் 1,000 விமானிகளிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இது செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பரிசோதிக்கப்பட்டதில் அனைவரும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் ஜகார்த்தாவில் 25 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்த Malaysia Airlines விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.

அவர் மெத்தாம்பெட்டமைன், எக்ஸ்டசி மற்றும் கொக்கேய்ன் ஆகியவற்றுக்கு நேர்மறையாகப் பரிசோதிக்கப்பட்டார். மேலும், கடத்தல் குழுவுடன் தொடர்புடைய மற்றொரு விமானியும் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவரத்தின் படி, Malaysia Airlines விமானப் பணியாளர்களில் 98.8 விழுக்காட்டினர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!