
புத்ராஜெயா, செப்டம்பர் 11 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மன்னிப்பு கோரிக்கை மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நஜீப்பின் மன்னிப்பு விண்ணப்பத்தை அடுத்து நடைபெறும் மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, BHEUU அறிவித்துள்ளது.
கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களுக்கான 63-வது மன்னிப்பு வாரியக் கூட்டம் இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. மன்னிப்பு வாரியம் இன்று கூடும் என நேற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, 65 கைதிகளை விடுவிக்கவும் மாமன்னர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்படும் கைதிகளில் மலேசியப் பிரஜைகள் அல்லாதவர்கள், விடுதலை செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நஜீப்பின் மன்னிப்பு விண்ணப்பம் குறித்து இன்று இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில், அடுத்த மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது.



