
சுங்கை பட்டாணி, செப்-17–கெடா, சுங்கை பட்டாணியில் நேற்று பேரங்காடியொன்றில் உள்ள நகைக் கடையில் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைக்கவசம் அணிந்திருந்த இரு சந்தேக நபர்கள், சுத்தியல் மற்றும் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி மூன்று கண்ணாடிக் காட்சிப் பெட்டிகளை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இருவர் சுமார் 20 மீட்டர் தொலைவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காத்திருந்ததாக கோலா முடா மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
களவாடப்பட்ட நகைகளின் மதிப்பு 700,000 ரிங்கிட் முதல் 1 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம் என்பது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்துக்குப் பின்னர் பொதுமக்கள் சிலர் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்த நிலையில், சில நகைகள் கண்டெடுக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியாளர்கள் யாரும் பணியில் இல்லை. அதே சமயம் யாரும் காயமடைந்ததாக இதுவரை தகவல் இல்லை. விசாரணைக்கு உதவும் வகையில் அப்பேரங்காடியின் CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஆயுதமேந்திய கொள்ளையாகக் கருதப்படும் அச்சம்பவம், குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397-வது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது. தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நகைக் கடையில் ஈராண்டுகளுக்கு முன் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்போதும் ஏறக்குறைய அதே மதிப்பிலான இழப்பு பதிவாகியிருந்ததும் தெரிய வந்துள்ளது.



