
டர் எஸ் சலாம், செப். 21 —தான்சானியாவின் பிரபலமான Safari சுற்றுலாத் தலமான Ngorongoro பாதுகாக்கப்பட்ட பகுதியில் குறைந்தது 10 சிங்கங்கள் மடிந்துள்ளன. அவற்றுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஜெர்மன் dpa செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இறந்த சிங்கங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியின் Ndutu எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக Ngorongoro பாதுகாக்கப்பட்ட பகுதி ஆணையம் (NCAA) தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அந்தச் சிங்கங்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.
தான்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில், வனவிலங்குகளுக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கால்நடைகளைச் சிங்கங்கள் தாக்கியதற்குப் பழிவாங்கும் வகையில் அவை சில சமயங்களில் கொல்லப்படுகின்றன.
இயற்கை வாழ்விட இழப்பு, நீர்நிலைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கான போட்டி ஆகியவை மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்களை மேலும் அதிகரிக்கின்றன. Ngorongoro பாதுகாக்கப்பட்ட பகுதி UNESCO உலகப் பாரம்பரியத் தளமாகவும், தங்கள் கால்நடைகளுடன் பாரம்பரியமாக வாழும் Maasai இன மக்களின் தாயகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



