Latestமலேசியா

தமிழ்க் கல்வியாளர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்; சிறப்பாக நடைபெற்ற ‘தகைமை விருதுகள் 2026’ விழா!

ஷா ஆலாம், செப் 21 – மலேசியாவில் தமிழ்க் கல்விக்கும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்களைக் கௌரவிக்கும் ‘தகைமை விருதுகள் 2026’ விழா, நேற்று மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்க் கல்வி ஆளுமை இயக்கமான TAGAMAI ஏற்பாட்டில், நாட்டில் முதன்முறையாக தமிழ்க் கல்வியாளர்களுக்கென முன்னெடுக்கப்பட்ட இவ்விருது விழாவில், தமிழறிஞர்கள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், மாணவர்கள், தமிழ் சார்ந்த அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர்.

சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டான் ஸ்ரீ பாலன், தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன் மற்றும் பினாங்கு மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆ. தெய்வீகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மூத்த கல்விமான் டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன் தலைமையில், TAGAMAI துணைத் தலைவர் டாக்டர் கே. நாகலிங்கம் மற்றும் விழாக் குழு செயலாளர் சி.எம். திரவியம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டுப் பணிகளின் பலனாக இவ்விருது விழா நடைபெற்றது.

இவ்விழாவில், ஏழு பிரிவுகளின் கீழ் தமிழ்க் கல்விக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மொத்தம் 60 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த தமிழ்ப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர் விருதை, செராஸ் பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வா லெட்சுமணன் பெற்றார்.

சிறந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர் விருது, ஜோகூர் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் கோமதி சங்கரனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் விருதை, ஜாலான் தாப்பா கிர் ஜோகூர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த குமரன் காந்தியப்பன் மற்றும் கிள்ளான் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கோகிலவேணி நவரத்தினம் ஆகிய இருவரும் பெற்றனர்.

சிறந்த இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர் விருது முத்து எல்லப்பனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் விருதை இணைப் பேராசிரியர் மனோன்மணி தேவி எம்.ஏ.ஆர். அண்ணாமலை பெற்றார்.

அதேவேளையில், தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு விருது திருமாவளவனுக்கும், தமிழ்க் கல்வி வாழ்நாள் சாதனையாளர் விருது டத்தோ சோதிநாதன் ஆசைப்பிள்ளைக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், ஏற்பாட்டுக் குழுவினரின் ஒத்துழைப்பாலும் பொதுமக்களின் ஆதரவாலும் விழா சிறப்பாக நடைபெற்ற நிலையில் தகைமை விருதுகள் விழா இனிவரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும் எனும் விருப்பமும் வந்திருந்த வருகையாளர்கள் முன்வைத்திருந்தனர்.

இதனிடையே இவ்விழாவின் அதிகாரப்பூர்வ ஊடக ஆதரவாளராக வணக்கம் மலேசியா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!