
தைவான், செப்டம்பர் 22 – தைவானின் தைச்சுங் (Taichung) நகரில், ஒரு வாரமாகக் காணாமல் போயிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் ஆடைப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அலுவலக குளிர்சாதனப் பெட்டியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
43 வயது மதிக்கத்தக்க அப்பெண், செப்டம்பர் 2ஆம் தேதி தைவான் வந்துள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி தைப்பேயிலுள்ள ஹோட்டலில் தனது காதலனைச் சந்தித்த பின்னர், அவர் மறுநாள் பெரிய ஆடைப் பையுடன் ஹோட்டலை விட்டு வெளியேறிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
பின்னர் அந்தப் பெண்ணைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், காவல்துறை சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் காதலனை தேடி சனிக்கிழமை கைது செய்தது. விசாரணையில், உறவை முடித்துக்கொள்ள வேண்டும் என பெண் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் அவரைக் கழுத்தை நெரித்ததாகவும் சந்தேக ஆடவன் தெரிவித்துள்ளான்.
பின்னர் சடலத்தை ஆடைப் பையில் வைத்து தைச்சுங் நகரிலுள்ள தனது அலுவலகத்திற்குக் கொண்டு சென்று, சுமார் ஒரு வாரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததைக் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளான். இந்தக் கொலை தொடர்பான மேல் விசாரணையை தைவான் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



