Latestமலேசியா

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாகச் சர்ச்சை; நாடக நடிகர்கள் மூவர் கைது!

கோலாலம்பூர், செப்-22-2018 ஆம் ஆண்டு நாடக நிகழ்ச்சியொன்றில் ருக்குன் நெகாராவைக் கேலி செய்தது தொடர்பில் ஐந்து நடிகர்களில் மூவரைக் காவல் துறை கைது செய்தது.

தேச நிந்தனை, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில், அம்மூவரும் சிலாங்கூரிலும் ஜோகூரிலும் மூன்று நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் முத்துவேல் தெரிவித்தார்.

அச்சம்பவம் தொடர்பான காணொளியில் காணப்பட்ட ஐந்து நடிகர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மற்றொருவர் பிரிட்டனில் இருப்பதாக நம்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட காணொளியைப் பரப்பிய நபரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கைதான மூவரின் தொலைபேசிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அந்த நாடகம் அல்லது ருக்குன் நெகாரா தொடர்பான பதிவுகள் எதுவும் காணப்படவில்லை. அந்த நாடகம் எட்டாண்டுகளுக்கு முன் பினாங்கில் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் நிலையில், அச்சமயத்தில் அது தொடர்பாக காவல் துறையில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என டத்தோ எம். குமார் விளக்கினார்.

சுமார் 10 நிமிடங்கள் கொண்ட அக்காணொளியில், ஐந்து நடிகர்கள் ருக்குன் நெகாராவைப் படிப்பதுடன், நையாண்டி மற்றும் இன உணர்வுகளைத் தூண்டக்கூடிய கருத்துகளைக் கூறிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அக்காணொளி தொடர்பான புகாரைத் தொடர்ந்து புக்கிட் அமான் விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.

விசாரணைகள் நடத்தப்பட்டு அறிக்கை முழுமைப்படுத்தப்படும். பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணை ஆவணங்கள் தேசிய சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என டத்தோ எம். குமார் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!