
காஜாங், செப்டம்பர் 23 – காஜாங் மற்றும் புத்ராஜெயா பகுதிகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு (PATI) போக்குவரத்து சேவை வழங்கி வந்த கும்பலை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) முறியடித்துள்ளது. கம்போங் டத்தோ அபு பக்கார் பாகிண்டா (Kampung Dato’ Abu Bakar Baginda,) பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற ஏழு வேன்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
சோதனையில், ஆறு வெளிநாட்டு ஓட்டுநர்கள் உரிய பயண ஆவணங்கள் அல்லது செல்லுபடியாகும் அனுமதியின்றி இருந்ததுடன், முறையான ஓட்டுநர் உரிமமும் இல்லாதது தெரியவந்தது. அவர்களில் வங்காளதேசத்தை சேர்ந்த ஐந்து பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். மேலும், ஒரு மலேசிய ஓட்டுநரும் வேன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு ஓட்டுநர்கள் மாதம் 1,600 முதல் 1,800 ரிங்கிட் வரை சம்பளம் பெற்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
வேன்களில் பயணம் செய்த 53 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 44 இந்தோனேசியர்கள், எட்டு வங்காளதேச நாட்டவர்கள் மற்றும் ஒரு மியான்மர் நாட்டவர் அடங்குவர். 18 முதல் 59 வயதுடைய இவர்கள், வேலைக்குச் சென்று வருவதற்காக மாதம் சுமார் 100 ரிங்கிட் செலுத்தி இந்த வேன் சேவையைப் பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. ஏழு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



