Latestமலேசியா

மித்ராவின் ‘துணை மடானி’ திட்டத்துக்கு 26,000 விண்ணப்பங்கள்; கூடுதல் நிதி ஒதுக்க லிங்கேஸ்வரன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், செப்.24-‘துணை மடானி’ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் ஆர். ஏ. லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். YKN எனும் தேசிய நலவாழ்வு அறக்கட்டளைக்கு வருகை புரிந்த அவர் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மித்ரா (MITRA) செயல்படுத்தும் துணை மடானி திட்டம், நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் B40 தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்குகிறது. இவ்வாண்டு ஜூலை முதல் சுமார் 26,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களின் அதிகரிப்பு இத்தகைய இலக்கு சார்ந்த உதவிகளுக்கான தேவையை வெளிப்படுத்துகிறது. குடும்பங்களின் அன்றாடச் செலவுகள், அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட சுமைகளை குறைக்க அத்திட்டம் உதவும் என லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வேளையில், ‘மித்ரா’ வுக்குப் பொறுப்பான அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் சிறந்த முறையில் அத்திட்டத்தை முன்னெடுத்து வருவதற்காக அவர் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

வரவிருக்கும் வரவு-செலவு அறிக்கையில் ‘துணை மடானி’ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்து அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சிரமங்களை எதிர்கொள்ளும் B40 மற்றும் பாதிக்கப்பட்ட M40 குடும்பங்களுக்கு உதவிகள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதிக நிதி ஒதுக்கீடு, திறமையான செயல்பாடு மற்றும் வெளிப்படையான இலக்கு சார்ந்த உதவி வழங்கும் நடைமுறைகள் மூலம் ‘துணை மடானி’ திட்டத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.

தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அவர்களின் தற்போதைய சிரமங்களை சமாளிக்க மட்டுமின்றி, குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!