
ஈப்போ, செப்-24 – உடற்கட்டுப் போட்டி மேடை அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி அங்கீகாரம் வழங்கும் FIF Mr Perak 2026 போட்டி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஈப்போவில் நடைபெறவுள்ளது.
Fitness International Federation (FIF) பேராக் கிளையின் ஏற்பாட்டில், ஈப்போ Central Hall-லில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளி போட்டியாளர்களுக்கான சிறப்பு பிரிவு முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.
இம்முறை இந்தச் சிறப்பு பிரிவில் 10 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.அவர்களின் முயற்சிக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனி மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக FIF இயக்குநர் காளியப்பன் ரகுராமன் தெரிவித்தார்.
“அவர்களுக்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்ற நோக்கிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவுடன், உடல் எடையைக் குறைத்து தங்களது உடல் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை ஊக்குவிக்கும் “Body Transformation” பிரிவும் இம்முறை சிறப்பு அம்சமாக இடம்பெறுகிறது.
வழக்கமான உடற்கட்டுப் போட்டியாளர்களைப் போன்று கட்டுடல் இல்லாவிட்டாலும், உடலை மாற்ற ஒருவர் மேற்கொண்ட முயற்சிக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதில் பங்கேற்பவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும் என காளியப்பன் தெரிவித்தார்.
வெற்றியாளர்களை மட்டும் கொண்டாடாமல், மாற்றத்திற்காக முயற்சி செய்தவர்களையும் மேடையேற்றி அங்கீகரிப்பதே இந்த இரு சிறப்பு பிரிவுகளின் நோக்கமாக உள்ளது.
மேலும், போட்டியை நேரில் காண பொதுமக்களுக்கு நுழைவு இலவசம்.
குறிப்பாக மாற்றுத்திறனாளி போட்டியாளர்களை நேரில் உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தவும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



