
தெலுக் இந்தான், செப் 25 – தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த B40 குடும்பங்களின் 100 மாணவர்கள், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் ‘தத்துப் பிள்ளைகள்’ திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Program Anak Angkat YB Menteri KPKT 2026 எனப்படும் இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து தனிநபர் மேம்பாட்டு வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பு வழங்கப்படும்.
மாணவர்கள் தங்களின் திறமைகளை அடையாளம் காணவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கவும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஙா கோர் மிங் தெரிவித்தார். குடும்பப் பின்னணி அல்லது பொருளாதாரச் சூழல் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்த 100 மாணவர்களின் தேர்வு KPKT, ஹிலிர் பேராக் மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் ஹிலிர் பேராக் மாவட்ட மற்றும் நில அலுவலகம் உள்ளிட்ட தரப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, Nekad Kecemerlangan MADANI (NKM) @ Teluk Intan 2026 திட்டத்தின் கீழ், SPM மற்றும் STPM தேர்வுகளை எதிர்கொள்ளும் 1,310 மாணவர்களுக்கு ஆறு வார கல்வி வழிகாட்டுதல் திட்டமும் நடத்தப்படுகிறது. இதில் 1,144 SPM மாணவர்களும் 166 STPM மாணவர்களும் அடங்குகின்றனர்.
மேலும், SMK Horley Methodist பள்ளியில் Program Sekolah Angkat MADANI 2026 கீழ் RM100,000 மதிப்பிலான Anjung Digital மேம்பாட்டுத் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அதோடு, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து RM120,000 நிதியை SMK Horley Methodist பள்ளியின் வசதிகளை மேம்படுத்த வழங்கியுள்ளன.
பள்ளியின் 600 மாணவர்களுக்கும் தலா RM200 வீதம், மொத்தம் RM120,000 மதிப்பிலான கல்வி உதவியும் வழங்கப்பட்டதாக KPKT செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கல்வி வழிகாட்டுதல் முதல் டிஜிட்டல் வசதிகள் மற்றும் நிதியுதவி வரை பல்வேறு முயற்சிகளின் வாயிலாக தெலுக் இந்தான் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை வலுப்படுத்த KPKT நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



