Latestமலேசியா

2027 பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றத்துக்கு 100 மில்லியன் ரிங்கிட் கோரிக்கை

கோலாலம்பூர், செப்-29-நாட்டில் பொருத்தமற்ற இடங்களில் இயங்கி வரும் 157 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்காக, 2027ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக அக்கோரிக்கை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்நிதி தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கோலாலம்பூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அது வலியுறுத்தியது.

இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் பள்ளிகளை இடமாற்றம் செய்வதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும். ஜோகூரில் உள்ள SJKT Rhini, சிலாங்கூரில் உள்ள SJKT Mahkota Cheras, ஆகியவை அதற்கு சிறந்த உதாரணங்கள் என அக்கூட்டமைப்பு தெரிவித்தது.

மேலும், ஆண்டுதோறும் குறைந்தது ஐந்து தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்யும் இலக்கை நிர்ணயிக்கவும், 157 பள்ளிகளின் நிலை, மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் அணுகல் ஆகியவற்றை மதிப்பீடு செய்யவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திரு. அருண் துரைசாமி, பாதிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளை அவசரமாக இடமாற்றம் செய்வதுடன், அவற்றின் பிரச்சினைகளை ஒருங்கிணைக்க பிரதமர் துறையின் கீழ் சிறப்புப் பணிக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திரு. குமரன் மாரிமுத்து, தமிழ்ப்பள்ளி NGO தலைவர்கள் பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து, புதிய பள்ளிகள் மற்றும் இடமாற்றத்துக்கான பொருத்தமான நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்றார்.

நாடு முழுவதும் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளின் நிலவரத்தை கண்காணித்து, இடமாற்றம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைக்க பிரதமர் துறையின் கீழ் “Pelan Tindakan Sekolah Tamil” (தமிழ்ப்பள்ளி செயல் திட்டம்) என்ற சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

அரசாங்கத்தை விமர்சிப்பது எங்களின் நோக்கமல்ல; தமிழ்க்கல்வியின் எதிர்காலத்தையும் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியின் நிலையான வளர்ச்சியையும் பாதுகாப்பதே நோக்கமாகும். அவ்வகையில் மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சுடன் ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக அக்கூட்டமைப்பு கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!