
கோலாலம்பூர், அக்டோபர்-6 – பிரபல கெந்திங் குழுமத்தின் நிறுவனர் மறைந்த தான் ஸ்ரீ லிம் கோ தோங்கின்(Lim Goh Tong) பேரன், தனது மறைந்த தாயார் லிம் சியூ கிம்மின் (Lim Siew Kim) சுமார் 1.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வரும் இடைக்கால நிர்வாகிகளை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
லிம் சியூ கிம், புற்றுநோய் காரணமாக 2022-ஆம் ஆண்டு தனது 73 வயதில் காலமானார்.
அவரின் 4 பிள்ளைகளில் ஒரே ஆண் வாரிசான 42 வயது Marcus Chan Jau Chwen என்பவரே கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக New Straits Times பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
சொத்து நிர்வாகம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ள நிலையில், 20 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான சட்டக் கட்டணங்கள் செலுத்தப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பணப் பரிவர்த்தனைகளில், 2024-ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கு செலுத்தப்பட்ட 14 லட்சம் ரிங்கிட் மற்றும் 8 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையும் அடங்குவதாக,
Marcus சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ Kamarul Hisham Kamaruddin தெரிவித்தார்.
இந்தச் செலவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது உட்பட, சொத்து நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தற்போது நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகிகளை நீக்கி, மறைந்த தனது தாயாரின் சொத்துகளை நிர்வகிக்க புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
1.6 பில்லியன் ரிங்கிட் சொத்து தொடர்பான இந்தப் பெரியக் குடும்பத் தகராறு, தற்போது நீதிமன்றம் சென்றிருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



