
ஜோகூர் பாரு, அக்-12-ஆடல், பாடல், விளையாட்டுகள், பரிசுகள் என ஜோகூர் பாருவில் ஒரு வண்ணமயமான இரவாக அமைந்தது, வணக்கம் மலேசியாவின் ‘ஒற்றுமை ஒளிரும் தீபாவளி’ கொண்டாட்டம்!
அக்டோபர் 10ஆம் தேதி சுத்ரா மால் பேரங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தீபாவளிக் கொண்டாட்டத்தை உற்சாகமாக ரசித்தனர். மக்களின் அமோக வரவேற்புடன், வணக்கம் மலேசியாவின் இரண்டாவது ஆண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியக் கலைஞர்களான Psychomantra, AG Paranjothy, MC Raaj, Crankstar ஆகியோரின் இசைப் படைப்புகளும், Shavena Dance Team-இன் நடனங்களும் அரங்கைக் களைகட்ட வைத்தன. உறுமி மேளத்தின் அதிரடி இசையும் கொண்டாட்டத்திற்கு மேலும் உற்சாகம் சேர்த்தது.
பார்வையாளர்களையும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்கிய Vanakkam Voice 60 Seconds Challenge, முறுக்கு சாப்பிடும் போட்டி உள்ளிட்ட விளையாட்டுகள் கலகலப்பை ஏற்படுத்தின. வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட வேளையில், வணக்கம் மலேசியாவின் நிகழ்ச்சிகள் மற்றும் Vanakkam Maxx செயலி குறித்த அறிமுகங்களும் இடம்பெற்றன.
ஒற்றுமை துறை அமைசின் துணை அமைச்சர் YB Yuneswaran-நின் பிரதிநிதியாக
ஜோகூர் மாநில ஒற்றுமைத்துறை இயக்குநர் Puan Nurul Akmalina bt Hj Shamsuddin மற்றும் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் Kartiyani Jeyapalan ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, கொண்டாட்டம் குறித்த தங்களின் மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு, Raja’s, BOH, Munchy’s, Enrico’s, Pancha, LEGOLAND Malaysia Resort மற்றும் SunGrain ஆகியவற்றின் ஆதரவுடனும், Colours of India ஒத்துழைப்புடனும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற ‘ஒற்றுமை ஒளிரும் தீபாவளி’ கொண்டாட்டம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
Colours of India ஏற்பாட்டில், அக்டோபர் 7 முதல் 11 வரை சுத்ரா மாலில் நடைபெற்ற ‘Southeast Asia Deepavali Festival & Trade Expo 2026’-இன் முக்கிய அங்கமாக இக்கொண்டாட்டம் இடம்பெற்றது. கண்காட்சியின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவும் அன்றைய நிகழ்ச்சியில் நடைபெற்றது.
இசை, நடனம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் தீபாவளி விற்பனைகளுடன் மக்களைக் கவர்ந்த Colours of India-வின் கொண்டாட்டங்கள், தொடர்ந்து பிற இடங்களிலும் நடைபெறவுள்ளன.
கலைகளால் இணைந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, ஒற்றுமையை ஒளிரச் செய்த இந்த இனிய இரவைப் போல, உங்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களும் தொடரட்டும்!



