Latestமலேசியா

2027 பட்ஜெட்: 9,000 மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணி வரவேற்கத்தக்கது; பிற சுகாதார ஊழியர்களுக்கும் தீர்வு தேவை – லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர், அக்-12-2027ஆம் ஆண்டுக்குள் 9,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் வரவேற்றுள்ளார். எனினும், மருத்துவர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருந்தக அதிகாரிகள், பல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இதர சுகாதாரத் துறை நிபுணர்களின் எதிர்காலத்துக்கும் உறுதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Sungai Bakap மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரும் முன்கள சுகாதாரப் பணியாளருமான தாம், சுகாதாரத் துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு அறிந்திருப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார். ஒப்பந்தக் காலத்தை நிறைவு செய்த பின்னரும் பல மருந்தக அதிகாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

பல ஆண்டுகளாக இவ்விவகாரம் தொடர்பாகத் தாம் குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், காலக்கெடு மற்றும் உறுதியான நடவடிக்கைகள் இல்லாத வாக்குறுதிகள் நிரந்தரத் தீர்வாகாது என்றார். எனவே, 2027 பட்ஜெட்டில் சுகாதார அமைச்சும் நிதி அமைச்சும் தெளிவான உறுதிமொழியையும் செயல்திட்டத்தையும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், சுகாதார அமைச்சரும் துணை சுகாதார அமைச்சரும் மருத்துவமனைகளுக்கு முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, சுகாதாரப் பணியாளர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெரியதல்ல என்பதால், இதற்கு உறுதியான அரசியல் முடிவும் தெளிவான செயல்பாடும் மட்டுமே தேவை என் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

ஒரு தரப்பினரின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது மற்றொரு தரப்பினரைப் புறக்கணிக்கக்கூடாது. சுகாதாரப் பணியாளர்களை நிச்சயமற்ற நிலையில் தொடர்ந்து காத்திருக்க வைக்க வேண்டாம். மக்களுக்கு சிறந்த சுகாதார அமைப்பையும், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!