
கோலாலம்பூர், அக்டோபர் 12 – டாக்ஸி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஒருமுறை 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (Anthony Loke) தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவி அக்டோபர் 14ஆம் தேதி புதன்கிழமை முதல் கட்டங்களாக வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 38,000 டாக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களும், 15,000 பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களும் பயனடைவார்கள்.
சிறப்பு ‘H’ வாகனப் பதிவு எண்களை ஏலம் விட்டதன் மூலம் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) திரட்டிய 91.2 மில்லியன் ரிங்கிட் நிதியிலிருந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படும் முன்பே இதனை வழங்க முடியுமென அவர் கூறினார்.
மேலும், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் விருப்பத்திற்கிணங்க, தீபாவளிக்கு முன்பாக இந்து ஓட்டுநர்கள் உதவித்தொகையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், முதல் கட்டப் பயனாளர்கள் புதன்கிழமை போக்குவரத்து அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, உதவித்தொகைக்கான பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள்.



