
மலாக்கா, அக்டோபர்-16,மலாக்கா மற்றும் ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், 6.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், 27 வயது நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
மலாக்காவில் நேற்று முன்தினம் காலை கைதான சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காரிலிருந்து, 27.5 கிலோகிராம் MDMA போதைப்பொருளும், 3.7 கிராம் கெட்டமினும் கண்டுபிடிக்கப்பட்டன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவிலுள்ள Crescent Bay Suites குடியிருப்பில் போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அங்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன், அவற்றைப் பொட்டலமிடுவதற்கும் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நீச்சல் பயிற்சியாளர், போதைப்பொருட்களைச் சேகரித்தல், பொட்டலமிடுதல் மற்றும் கையாளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ரோபர்ட் தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் கெட்டமின் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் உறுதிச் செய்யப்பட்டது.
போதைப்பொருட்களின் மூலத்தையும், அவை விநியோகிக்கப்படவிருந்த இடங்களையும் போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சந்தேக நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



