
கோலாலம்பூர், அக்டோபர்-18 – கோலாலம்பூர் குடிநுழைவு இலாகா அலுவலகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு அனுமதிப் பெர்மிட்டுகள் வழங்கப்படுவதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை தொடங்கப்படவுள்ளது.
அவசரத் தேவைகளுக்காக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் அந்தச் சிறப்பு அனுமதிச் சீட்டுகள், மலேசியாவில் அவர்கள் தொடர்ந்து தங்குவதற்காக முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நடவடிக்கையில் உள்ளூர் இடைத்தரகர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், விண்ணப்பதாரர்களின் கடப்பிதழ்கள் மற்றும் புகைப்படங்கள் குடிநுழைவு அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து குடிநுழைவு இலாகாவின்
நெறிமுறைப் பிரிவு விசாரணை நடத்தும் என கோலாலம்பூர் குடிநுழைவு இலாகா இயக்குநர் Hamsha Injau
தெரிவித்தார்.
சட்டம் அல்லது விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, பொது மக்களும் அங்கீகரிக்கப்படாத இடைத்தரகர்களைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ வழிகளில் மட்டுமே குடிநுழைவு இலாகாவை அணுகுமாறும் அவர் அறிவுறுத்தினார்.



