Latestமலேசியா

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நவராத்திரி 7ஆம் நாள் வியாபாரிகள் உபய விழா

கோலாலம்பூர், அக்டோபர்-18 – ​கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற 7-ஆம் நாள் வியாபாரிகள் உபயப் பெருவிழா நேற்றோடு இனிதே நிறைவுற்றது.

​அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நவராத்திரி விழாவின் 7-ஆம் நாள் நிகழ்வை, மஹிமா அமைப்பின் தலைவரும் ம.இ.கா தேசியப் பொருளாளருமான டத்தோ N. சிவகுமார் தலைமையில், கிருஷ்ணன் மற்றும் விக்னேஸ்வர அய்யர் ஆகியோர் மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நடத்தினர்.

​நேற்று நடைபெற்ற இந்த வியாபாரிகள் உபயத்தின் தொடக்கமாகக் காலையில் 108 சங்காபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் இசைக்கச்சேரிகள் மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று விழாவை மேலும் சிறப்பித்தன.

​இவ்விழாவின் முக்கிய அங்கமாக, ‘தேவாரம் & புத்தகம்’ அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

Team DSK மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தேவாரம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

​சமூகச் சேவையின் ஓர் அங்கமாக, தமிழ்ப் பள்ளிகள் மற்றும் ஆசிரமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்குச் சிறப்பு அன்பளிப்புகளும் விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

​வருகை தந்திருந்த பெண்களுக்குச் சேலைகள் உபயமாக வழங்கப்பட்டன.

​சுமார் 1,500 முதல் 2,000 வரையிலான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

​ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறும் உபயங்களிலேயே மிகச் சிறந்த மற்றும் பெரிய உபயமாக இந்த வியாபாரிகள் உபயம் உருவெடுத்துள்ளதாக, தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ R. நடராஜா வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

​கடந்த 20 ஆண்டுகளாக இந்த வியாபாரிகள் உபயத்தை நல்நோக்கத்துடன் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட டத்தோ என். சிவகுமார், பொது மக்கள் மற்றும் பக்தர்களின் பேராதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

​நேற்றைய இந்நிகழ்வு ஆன்மீக பக்தியோடு சமூக நற்பணிகளும் இணைந்து மிகச் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!