
மும்பை, அக்- 19-பாலிவுட் நடிகர் Tiger Shroff சென்ற வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியான Juhuவில் புஷ்பா பார்க் எனுமிடத்தில் நேற்று அச்சம்பவம் நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர் பயணித்த வாகனத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
அதில் Tiger Shroff காயமின்றி உயிர் தப்பினார். எனினும், அவரது தனிப்பட்ட ஓட்டுநரும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்தனர். தனிப்பட்ட ஓட்டுநரின் இடது கையிலும், ஆட்டோ ஓட்டுநரின் மார்பிலும் காயம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இருவரும் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அச்சம்பவத்திற்கு Lawrence Bishnoi கும்பலைச் சேர்ந்த Anil Pandit, Harman Sandhu ஆகியோர் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், நடிகர் சல்மான் கானுடன் யாரும் பணியாற்றக்கூடாது என எச்சரித்தும் அதைப் புறக்கணித்ததால் Tiger Shroff குறிவைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களது எச்சரிக்கையை மீறுபவர்கள் அடுத்ததாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். Lawrence Bishnoi கும்பல் ஏற்கெனவே சல்மான் கானைக் குறிவைத்து மிரட்டல்களை விடுத்துள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர முதலமைச்சர், மும்பை காவல் ஆணையரைத் தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். நடிகர் Tiger Shroff, மூத்த பாலிவுட் நடிகர் Jackie Shroffபின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



