
அலோர் காஜார், அக்-18 — எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடமிருந்து கிடைக்கும் சாதகமான கருத்துகளும் ஆதரவும் பி.கே.ஆருக்கு நம்பிக்கையளிப்பதாக அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
சனிக்கிழமை அலோர் காஜார், கெரிஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ‘ஐ-லிண்டுங் யு கெகார் @ மலாக்கா’ நிகழ்ச்சியைத் திறந்து வைத்த பின்னர், மனிதவள அமைச்சருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நவம்பர் 14 மாநிலத் தேர்தலுக்காகக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருவதாக அவர் கூறினார். வெளி மாநிலக் கிளைகளின் ஒத்துழைப்புடன் உள்ளூர் தலைவர்கள் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ள 2027 பட்ஜெட்டும், தேர்தலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, மலாக்கா தேர்தலுக்கான பி.கே.ஆர் வேட்பாளர் பட்டியல் 99 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்சித் தலைவர் அன்வாரின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்குப் பின்னர், அக்டோபர் 24-ஆம் தேதி குருபோங்கிலுள்ள ஹங் ஜெபாட் அரங்கில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.
முன்னதாக, சுமார் 2,000 பேர் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் பேசிய ரமணன், மடானி அரசின் கீழ் மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
2027 பட்ஜெட் அறிவிப்பின்படி, ‘லிண்டுங் 24 ஜாம்’, ‘லிண்டுங் கெண்டிரி’ திட்டங்களில் பங்களிப்போருக்கு 150 ரிங்கிட் வரை கூடுதல் வரிச் சலுகை வழங்கப்படும் என்றும், இதன் மூலம் நாடு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மலாக்காவைச் சேர்ந்த 400 இல்லத்தரசிகளுக்கு ‘லிண்டுங் காசே’ திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு நிதியுதவி வழங்கப்பட்டது. மாநிலத்தின் பாரம்பரிய பேச்சா ஓட்டுநர்களுக்கும் பெர்கேசோ மூலம் சிறப்பு நிதியுதவியும் சமூகப் பாதுகாப்பும் வழங்கப்பட்டன.



