
பட்டர்வொர்த், அக்-19-பினாங்கு, Bagan Ajamமில் பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலையின் டோல் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில், 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 179 அபராத அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. நேற்று மாலை 5 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற அச்சோதனை நடவடிக்கையில், 145 பேர் சோதனை செய்யப்பட்டனர். 133 மோட்டார் சைக்கிள்களும் சோதனைகள் உட்படுத்தப்பட்டன.
பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் கண்டறிவதே அந்நடவடிக்கையின் நோக்கம் என Seberang Perai Utara மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார். 179 அபராத அறிவிக்கைகளில் காவல்துறை 158 ட்டையும் சாலைப் போக்குவரத்துத் துறை 21 றையும் வெளியிட்டன.
ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியதாக 25 சம்பவங்கள் பதிவாகின. விதிமுறைகளுக்கு முரணான பதிவுத் எண்கள், P லைசன்ஸை பார்வைக்கு வைக்காதது, மோட்டார் சைக்கிள்களில் மாற்றங்கள் செய்தது, மாற்றியமைக்கப்பட்ட புகைப்போக்கிகள் மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களும் கண்டறியப்பட்டன. அதோடு, காப்பீடு மற்றும் காலாவதியான வாகன உரிமங்கள் தொடர்பான விதிமீறல்களும் அடையாளம் காணப்பட்டன.
முன்னதாக, டோல் சாவடியில் இருந்து வெளியேறும் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பந்தயத் தளத்தைப் போலக் கூடியிருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன், மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை எழுந்தது.



